'எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகம் இவ்வளவு பொறுமையாக இருந்தது கிடையாது' - ராமர் கோவில் குறித்து அமித்ஷா பேச்சு


எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகம் இவ்வளவு பொறுமையாக இருந்தது கிடையாது - ராமர் கோவில் குறித்து அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2024 7:13 PM IST (Updated: 10 Feb 2024 7:21 PM IST)
t-max-icont-min-icon

ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை எடுத்துக்காட்டியதாக அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் மற்றும் திறப்பு விழா தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ராமர் கோவில் விவகாரத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றிணைத்தார். எந்த ஒரு நாட்டிலும் பெரும்பான்மை சமூகம் தனது நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் பொறுமையுடன் காத்திருந்தது கிடையாது. ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான மக்கள் போராட்டம் 1528-ல் தொடங்கியது. அதற்கான சட்டப் போராட்டம் 1858-ல் தொடங்கியது. இந்த போராட்டம் கடந்த ஜனவரி 22-ந்தேதி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் கலாச்சாரத்தை ராமாயணத்திலிருந்து பிரிக்க முடியாது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுடன் 300 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் தேர்தலுக்காக வழங்கப்பட்டதாக சிலர் கேலி செய்தனர். மோடி அரசு முத்தலாக்கை தடை செய்தது. மேலும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது. பா.ஜ.க.வும், அதன் தலைவர் மோடியும் சொன்னதைச் செய்பவர்கள்.

சட்டம் மற்றும் அரசியலமைப்பை பின்பற்றி அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் கோவில் கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளம். ஜனவரி 22-ந்தேதி தொடங்கிய பயணம் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லப்படும். 2024-ம் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அரசியல் கோஷங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை. விமர்சனம் செய்பவர்கள் இந்த விவகாரத்தில் பெரும்பான்மையான மக்களின் உணர்வை மதிக்க வேண்டும். மகிழ்ச்சி மற்றும் பக்தி நிறைந்த சூழ்நிலையை கெடுக்க கூடாது.

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 'ரத யாத்திரை' மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை அளித்தது. பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story