ஒடிசா: வி.கே. பாண்டியன் மீது தக்காளி வீசிய வாலிபர்; அடித்து, நொறுக்கிய தொண்டர்கள்


ஒடிசா:  வி.கே. பாண்டியன் மீது தக்காளி வீசிய வாலிபர்; அடித்து, நொறுக்கிய தொண்டர்கள்
x

என் மீது முட்டை, தக்காளி மற்றும் மை வீசினாலும் ஒடிசா மக்களுக்கு நான் சேவையாற்றுவேன் என வி.கே. பாண்டியன் கூறினார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியின் 5டி தலைவராக இருப்பவர் வி.கே. பாண்டியன். குழுவாக பணியாற்றுதல், வெளிப்படை தன்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த 5டி தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அவர், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பின்னர் ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர், 5டி தலைவராக ஆக்கப்பட்டார். இந்நிலையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெல்லாகுந்தா பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வி.கே. பாண்டியன் இன்று வந்துள்ளார்.

அப்போது, அவரை நோக்கி தக்காளி வீசப்பட்டு உள்ளது. அவர் சற்றும் எதிர்பாராதபோது நடந்த இந்த நிகழ்வை அடுத்து, தக்காளி வீசியவரை சுற்றியிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர்.

எனினும், போலீசார் முன்னிலையிலேயே கட்சி தொண்டர்கள் அந்த இளைஞரை அடித்து, உதைத்தனர். இதில், அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் மீட்டு, கைது செய்து அழைத்து சென்றனர்.

அவர், காங்கிரஸ் தொண்டர் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பிஜு ஜனதா தளம் கட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் வி.கே. பாண்டியனை எதிர்த்து வந்துள்ளார். இந்த நிகழ்வுக்கு பின் வழக்கம்போல், திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய வி.கே. பாண்டியன், என் மீது முட்டை, தக்காளி மற்றும் மை வீசினாலும் ஒடிசா மக்களுக்கு நான் சேவையாற்றுவேன் என கூறினார்.

இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதற்கு முன்பு, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றி வந்தபோது, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது, அவர் மீது மை வீசப்பட்டது. இதில், வி.கே. பாண்டியனின் சட்டை முழுவதும் மை கறையாக இருந்தபோதும், அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


Next Story