ஒடிசா முதல்-மந்திரியை ஜெகநாதருடன் ஒப்பிட்ட மந்திரி; பெரும் சர்ச்சை


ஒடிசா முதல்-மந்திரியை ஜெகநாதருடன் ஒப்பிட்ட மந்திரி; பெரும் சர்ச்சை
x

கோப்புப்படம்

ஒடிசா முதல்-மந்திரியை ஜெகநாதருடன் ஒப்பிட்ட மந்திரியின் பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

புவனேசுவரம்,

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி சர்ச்சைகள் ஏதுமின்றி அமைதியாக நடந்து வந்தது.

ஆனால் நவீன் பட்நாயக் மந்திரிசபையில் தொழில்துறை மந்திரி பதவி வகிக்கும் பிரதாப் கேசரி தேப் பேசிய ஒரு பேச்சு, பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்து விட்டது. அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சுதான் வினையாக அமைந்து விட்டது.

அவர் பேசியது இதுதான்-

" ஒரு காலத்தில் ஒடிசா என்றால் மக்கள் (பூரி) ஜெகநாதர் பெயரால் அடையாளம் கண்டு கொண்டார்கள். ஆனால் இப்போது நீங்கள் ஒடிசாவில் இருந்து வருகிறேன் என்று சொன்னால், நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக இருக்கிறாரே அங்கிருந்தா என்று உடனே அடையாளம் காண்கிறார்கள்".

ஆனால் இந்த பேச்சு பட்டாசை கொளுத்தி போட்டாற்போல ஆகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் விளாசி உள்ளன.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, "இது ஆணவம். ஒடிசாவின் 4½ கோடி மக்களின் நம்பிக்கையையும், உலகமெங்கும் உள்ள இந்துக்களையும் கொச்சைப்படுத்துகிறது. மந்திரி பிரதாப் கேசரி தேப்பின் கருத்தை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறாரா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்" என குறிப்பிட்டார்.

ஒடிசா காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக், மந்திரி பிரதாப் கேசரி தேப்பின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று முடித்துக்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும், மந்திரி பிரதாப் கேசரி தேப் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளன.

மற்றொரு பக்கம் ஜெகநாத சேனா அமைப்பு, பூரியில் மந்திரி பிரதாப் கேசரி தேப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது.

பூரி ஜெகநாத் ஆலய மூத்த சேவையாளர் பினாயக் தாஸ்மொகபாத்ரா, "ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து வருவதால்தான் மந்திரி அப்படி பேசி இருக்கிறார். ஒரு மனிதருடன், அவர் முதல்-மந்திரியாக இருந்தாலும் இறைவனுடன் ஒப்பிட எப்படி தைரியம் வந்தது?" என கேட்டார்.

இந்த விவகாரம், ஒடிசாவின் பேசுபொருளாகி இருக்கிறது.


Next Story