நவராத்திரி பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று மாலை தங்கத்தேரோட்டம்
பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம் தொடங்கியது முதல் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்மம், முத்துப்பந்தல், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தார்.
பிரம்மோற்சவ 5ம் நாளான நேற்றிரவு முக்கிய வாகன சேவையான கருடசேவை நடந்தது. இதில் மலையப்ப சுவாமி தங்க, வைர, பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடசேவையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பல்வேறு சுவாமி வேடங்கள் தரித்து நடனமாடி வந்தனர்.
தொடர்ந்து இன்று மாலை தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். பின்னர் இன்றிரவு கஜ(யானை) வாகனத்திலும் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.