'பார்ட் டைம் ஜாப்' வாங்கித்தருவதாக நூதனமோசடி -ஆன்லைனில் ரூ. 13 லட்சம் இழந்த பேராசிரியை
பேராசிரியையிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் துரித நடவடிக்கையில் ரூ.7.52 லட்சம் மீட்கப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் மவுலட் நகரில் உள்ள கல்லூரியில் பேராசிரியை (பெயர் குறிப்பிடப்படவில்லை) பணியாற்றி வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் அறிமுகமான கும்பல் பகுதிநேர வேலை 'பார்ட் டைம் ஜாப்' வாங்கித்தருவதாக கூறியுள்ளது.
ஆன்லைனில் அறிமுகமான கும்பலை நம்பிய பேராசிரியை முதலில் 3.18 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி மேலும் 10 லட்ச ரூபாயை அந்த கும்பலுக்கு பேராசிரியை அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியை நொடியும் தாமதிக்காமல் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து பணப்பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தினர்.
இதன் மூலம் பேராசிரியையின் பணம் 7.52 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது. ஆனாலும், 5.66 லட்ச ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடமிருந்து மீட்கமுடியவில்லை. இந்தபோதிலும் பணம் பறிபோனது குறித்து பேராசியை உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததால் இவ்வளவு பணத்தை மீட்கமுடிந்ததாகவும், இதுபோன்ற மோசடியில் சிக்காமல் மக்கள் கவனமாக இருக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.