ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் ரூ.4,000 கோடி பணம் சுருட்டல்; 25 இடங்களில் சோதனை: அமலாக்க துறை அதிரடி


ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் ரூ.4,000 கோடி பணம் சுருட்டல்; 25 இடங்களில் சோதனை: அமலாக்க துறை அதிரடி
x

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் சட்டவிரோத வகையில் ரூ.4,000 கோடி பணம் சுருட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளன என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வெளிநாட்டில் பதிவு செய்து கொண்டு இந்தியாவில் இயங்கி வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் வலைதளங்களுக்கு எதிராக பெமா விதிமீறல்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில், 25 இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. இதன்படி, டெல்லியில் 11 இடங்களில், குஜராத்தில் 7 இடங்களில், மராட்டியத்தில் 4 இடங்களில், மத்திய பிரதேசத்தில் 2 இடங்களில் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஓரிடத்திலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த வகை நிறுவனங்கள் சிறிய தீவு நாடுகளான குரகாவ், மால்டா மற்றும் சைப்ரஸ் நாடுகளில் பதிவு செய்து கொண்டு உள்ளன. இவை அனைத்தும், வேறு நபர்களின் பெயர்களில் இந்திய வங்கி கணக்குகளுடன் தொடர்பு வைத்து உள்ளன.

இதன்படி, பொதுமக்களிடம் இருந்து கேமிங் வலைதளங்கள் வழியே சேகரிக்கப்பட்ட பணம் முழுவதும் பல்வேறு வங்கி கணக்குகளில் சேர்க்கப்பட்டு, இறுதியில் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன. பெமா விதிகளின் கீழ் பந்தயம் அல்லது சூதாட்டம் அல்லது வேறு எந்த பொழுதுபோக்கின் வழியே வருவாய் ஈடடுவதற்கு அனுமதி இல்லை.

அமலாக்க துறையின் சோதனையில் குற்றச்சாட்டுகளுக்கான பல ஆவணங்கள், மின்னணு சாதன சான்றுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதற்காக தங்களது பணியாளர்களின் பெயர்களில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களை திறந்து, ரூ.4 ஆயிரம் கோடி பணம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இதற்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு பான் கார்டுகள், ஆதார் கார்டுகள், இந்நிறுவனங்களின் வங்கி கணக்குகளை இயக்குவதற்கான மொபைல் போன்கள் மற்றும் அலுவலக ஸ்டாம்புகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


Next Story