சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க உறுதி செய்திருக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு
தேச பிரிவினையின்போதே சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று கூறியுள்ளார்.
பெகுசராய்,
பா.ஜ.க.வின் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் பேசும்போது இந்து சமூகம் பற்றி குறிப்பிட்டார்.
இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள். 40 வயதிற்குப் பிறகு அவர்கள் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனவே, அவர்கள் குழந்தைகளைப் பெறுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? வளமான நிலத்தில் விதைத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும்.
இந்துக்களும் முஸ்லீம்களின் பார்முலாவைப் பின்பற்றி தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பிறகு பாருங்கள். எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற வகையில் கூறினார்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங், தனது மக்களவை தொகுதியான பெகுசராய் பகுதியில் இருந்து இன்று பேசினார்.
நாடு மதத்தின் பெயரால் பிரிந்தது. அப்போதே, சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்தியாவில் தொடர்ந்து வசிக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதனை விடுத்து, பத்ருதீன் மற்றும் அசாதுதீன் ஒவைசி போன்றோரை வசைபாடி கொண்டிருக்க கூடாது என கூறியுள்ளார்.
நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என கூறிய அவர், பத்ருதீன் மற்றும் அவரது சகாக்கள், நீண்ட காலம் வலிமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டிருக்கும் சீனாவுக்கு எதிராக பேசட்டுமே என சவால் விடுத்துள்ளார்.
சமீபத்திய, நமது அண்டை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 1980-ம் ஆண்டு இறுதி வரையில் நம்மை விட குறைவாக காணப்பட்டது. ஆனால், இன்று அவர்கள் எந்தளவுக்கு முன்னேறியுள்ளனர் என பாருங்கள்.
சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தில் இருந்து அந்நாட்டின் முஸ்லிம்கள் உள்பட ஒருவரும் விதிவிலக்கு கிடையாது. உலகம் முழுவதும் மொத்த நில பகுதியில் நமது பரப்பு 2.5 சதவீதம் இருந்தபோதும், உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் நமது நாட்டில் உள்ளனர்.
அதனால், மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் எடுக்காவிட்டால், நீடித்த பொருளாதார வளர்ச்சியை நாம் அடையவே முடியாது என்று அவர் கூறியுள்ளார்.