இந்த ஆண்டில் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி


இந்த ஆண்டில் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
x

2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், `எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை பொதுமக்கள், மாணவ-மாணவியர் கண்டு களித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-

பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் பூமியிலிருந்து 650 கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு ஆய்வு பணியை தொடங்கியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எக்ஸ்போசாட்டின் இயக்கம் சிறப்பாக உள்ளது. இது மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று; இதில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளது.

ககன்யான் தயார் நிலைக்கான ஆண்டாக 2024 இருக்கப் போகிறது. 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். இந்த ஆண்டில் (2024) 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் வரும் 6-ம் தேதி எல்1 புள்ளியை எட்டும், அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story