இந்திய ஒற்றுமை யாத்திரையில் பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு; காங்கிரஸ் அறிவிப்பு


இந்திய ஒற்றுமை யாத்திரையில் பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு; காங்கிரஸ் அறிவிப்பு
x

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி உடன் பெண்கள் மட்டும் இன்று பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.



சண்டிகர்,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை டெல்லியின் லோனி பகுதி வழியே உத்தர பிரதேசத்தில் அவரது யாத்திரை நுழைந்தது.

அதன்பின்பு, அவரது யாத்திரை கடந்த புதன் கிழமை மாவிகலா பகுதியில் இருந்து பராத் பகுதிக்கு சென்றது. தொடர்ந்து பாக்தத் பகுதியையும் கடந்து சென்றது. இந்த யாத்திரையில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடன் கலந்து கொண்டார்.

கடந்த 6-ந்தேதி மீண்டும் அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அரியானாவின் குருசேத்ராவை இந்த யாத்திரை நேற்று வந்தடைந்து உள்ளது.

இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி உடன் பெண்கள் மட்டும் இன்று பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பாரத் ஜோடோ யாத்திரையில் அனைவரும் பெண்களாக இன்று பங்கேற்க உள்ளனர். அதிக ஆச்சரியமளிக்கும் தினத்தில் ஒன்றாக இது இருக்கும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் முன்னோக்கிய பயணத்தில் ராகுல் காந்தி தீவிர உணர்வோடும், உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் செயல்பட்டு வருகிறார் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, இன்றைய யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

கடந்த டிசம்பரில் ராஜஸ்தானில் சவாய் மாதோப்பூர் மாவட்டத்தில் பீப்புள்வாடா பகுதியை நோக்கிய பயணத்தின்போது, பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் பெண்கள் மட்டுமே பங்கேற்றனர். கடந்த நவம்பர் 19-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இதேபோன்று, பெண்கள் மட்டுமே ராகுல் காந்தியுடன் யாத்திரையில் கலந்து கொண்டனர்.


Next Story