ஆபரேசன் அஜய்; 274 இந்தியர்களுடன் 4-வது விமானம் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தடைந்தது


ஆபரேசன் அஜய்; 274 இந்தியர்களுடன் 4-வது விமானம் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தடைந்தது
x
தினத்தந்தி 15 Oct 2023 4:48 AM GMT (Updated: 15 Oct 2023 10:34 AM GMT)

ஆபரேசன் அஜய் திட்டத்தின் கீழ் 274 இந்தியர்கள் அடங்கிய 4-வது விமானம் இஸ்ரேலில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தது.

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இஸ்ரேலில் இந்தியர்களும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். போரையடுத்து, அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு குடிமக்களை இஸ்ரேலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா, டென்மார்க், பின்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன்படி, பொதுமக்கள் வெளியேற உதவி செய்யும் வகையில், அவர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் குடிமக்களுக்கான உதவி மையங்களை அமைத்து உள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. ஆபரேசன் அஜய் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் தனி விமானத்தில் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவுடன் இந்த விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைந்தது.

இதன்பின்னர், டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்து கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியாவுக்கு வந்தது. இந்த நிலையில், 274 இந்தியர்கள் அடங்கிய 4-வது விமானம் இஸ்ரேலில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்தது. அவர்களை மத்திய மந்திரி வி.கே. சிங் வரவேற்றார்.

இதுபற்றி இஸ்ரேலில் இருந்து திரும்பிய இந்தியர் ஒருவர் கூறும்போது, டெல் அவிவில் நிலைமை சீராக காணப்படுகிறது. ஆனால், தெற்கு மற்றும் வடக்கு இஸ்ரேலில் போருக்கான வாய்ப்புகள் உள்ளன. அதனாலேயே, நாங்கள் திரும்பி விட்டோம். அரசு ஒரு நல்ல பணியை செய்திருக்கிறது. 2 மற்றும் 3 நாட்களில் விரைவாக செயல்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.


Next Story