'புதிய நாடாளுமன்ற கட்டிடம்' மத்திய பாஜக அரசை பாராட்ட வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி கண்டனம்


புதிய நாடாளுமன்ற கட்டிடம் மத்திய பாஜக அரசை பாராட்ட வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி கண்டனம்
x

டெல்லியில் இருந்தால் நான் நிச்சயம் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பேன் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாவர்க்கரின் பிறந்தநாளான வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று காங்கிரஸ், திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி குலாம் நபி ஆசாத் விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில், நான் டெல்லியில் இருந்தால் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன். ஆனால், வெறொரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வேண்டியுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிய மத்திய அரசை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும், ஆனால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சிக்கின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததை நான் எதிர்க்கிறேன்.

30 முதல் 35 ஆண்டுகளுக்கு முன் நான் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியாக இருந்தபோது புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்று எங்களுக்கு கனவு இருந்தது. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், சிவராஜ் பாட்டேல் மற்றும் நான் சேர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது குறித்து விவாதித்தோம். அதை கட்டுவதற்கான வரைபடங்களையும் அமைத்தோம். ஆனால், அப்போது அது கட்ட முடியவில்லை, ஆனால் இப்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது மிகவும் நல்லது' என்றார்.


Next Story