'தேர்தல் பத்திரங்கள் மூலம் எதிர்கட்சிகளும் பணம் பெற்றார்கள், அதற்கு பெயர் பணம் பறிப்பதா?' - அமித்ஷா கேள்வி


தேர்தல் பத்திரங்கள் மூலம் எதிர்கட்சிகளும் பணம் பெற்றார்கள், அதற்கு பெயர் பணம் பறிப்பதா? - அமித்ஷா கேள்வி
x

தேர்தல் பத்திரங்களை ‘பணம் பறிக்கும் திட்டம்’ என்று விமர்சித்த ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி கடந்த பிப்ரவரி 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டது.

இதன்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் ரூ.6,986.5 கோடி நன்கொடையை பெற்று பா.ஜ.க. முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334 கோடியும் நன்கொடை பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உலகின் மிகப்பெரிய பணம் பறிக்கும் திட்டம் என்றும், பிரதமர் மோடியை ஊழலின் சாம்பியன் என்றும் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது;-

"தேர்தல் பத்திரங்கள் மூலம் எதிர்கட்சிகளும் பணம் பெற்றுள்ளனர். அதற்கு பெயர் பணம் பறிப்பதா? ராகுல் காந்தி மக்களிடம் முன்வந்து, 'நாங்கள் பணம் பறிப்பில் ஈடுபட்டோம்' என்று ஒத்துக்கொள்ள வேண்டும். எதிர்கட்சிகளிடம் இருக்கும் எம்.பி.க்களின் விகிதத்தையும், அவர்கள் பெற்ற நன்கொடையையும் பார்க்கும்போது, எங்களை விட அவர்கள் அதிகமாக பெற்றுள்ளார்கள் என்பது தெரியவரும். எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதால் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெறாது."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story