நாடு முழுவதும் 75 நகரங்களில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள்: கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்பு


நாடு முழுவதும் 75 நகரங்களில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள்: கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
x

Image Courtacy: ANI

கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மைசூரு,

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாடு முழுவதும் 75 நகரங்களில் யோகா பயிற்சிக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்து உள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்த முடியாததால், இந்த ஆண்டு பிரமாண்டமாக அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதைப்போல நொய்டாவில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நாடு விடுதலையடைந்த 75-வது ஆண்டு கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, 75 நகரங்களில் யோகா நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுவதாக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுதான்ஜூ திரிவேதி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரிகள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


Next Story