மனித உரிமை என்ற பெயரில் முதலை கண்ணீர் வடிக்கிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங் காட்டம்


மனித உரிமை என்ற பெயரில் முதலை கண்ணீர் வடிக்கிறது பாகிஸ்தான்:  ராஜ்நாத் சிங் காட்டம்
x

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அராஜகத்திற்கான விதைகளை தூவும் பாகிஸ்தான், வருங்காலத்தில் முட்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.



புத்காம்,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் இந்திய ராணுவம் சார்பில் நாட்டின் 76-வது காலாட்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சவுரியா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா ராணுவம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி ஒன்றிலும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

காஷ்மீருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அடுத்து, இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் கொண்ட 2-வது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆவார். இன்றைய தினத்தில் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த தினத்தில், துணிச்சலான இந்திய காலாட்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர்களது தைரியம், தியாகம் மற்றும் சேவைக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து புத்காம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்த தினம், நாம் தீர்மானம் ஒன்றை எடுத்து கொள்வதற்கான ஊக்கத்தினை நமக்கு அளிக்கிறது.

அதன்படி, வருங்காலத்தில் எந்த சூழல் வந்தபோதும், நம் முன்னால் எத்தனை பிரிவினைவாத சக்திகள் வந்தபோதும், அதுபற்றி கவலை கொள்ளாமல் அவர்களது சொந்த மொழியிலேயே அதற்கு பதிலளித்து விட்டு, நம்முடைய நாட்டை நாம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகள் என்ற பெயரில் முதலை கண்ணீர் வடிக்கும் பாகிஸ்தான், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எதிரான அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது.

அதற்கான பின்விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என ராஜ்நாத் சிங் கடுமையாக கூறியுள்ளார்.

நமது பகுதிகளை அங்கீகாரமின்றி ஆக்கிரமித்து கொண்ட பாகிஸ்தான், அந்த பகுதி மக்களுக்கு எத்தனை உரிமைகளை வழங்கியுள்ளது என அவர்களை நான் கேட்க விரும்புகிறேன்.

இந்த பகுதி மக்களின் நலன்களுக்காக என்று கூறி கொண்டு, மனித உரிமைகள் பெயரில் பாகிஸ்தான் முதலை கண்ணீர் வடிக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

இந்த மனித தன்மையற்ற சம்பவங்களுக்கு பாகிஸ்தான் நாடே முழு அளவில் பொறுப்பேற்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அராஜகத்திற்கான விதைகளை இன்று விதைக்கும் பாகிஸ்தான், வருங்காலங்களில் முட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

1947-ம் ஆண்டில் அகதிகளாக இருந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்போது, அவர்களின் முன்னோர் நிலம் அவர்களிடமே மரியாதையுடன் திருப்பி அளிக்கப்படும்போது இந்த பயணம் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story