2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை இன்று பீதரில் தொடக்கம்


2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை இன்று பீதரில் தொடக்கம்
x

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை இன்று (வியாழக்கிழமை) பீதரில் தொடங்குகிறது.

பெங்களூரு:

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை இன்று (வியாழக்கிழமை) பீதரில் தொடங்குகிறது.

ஆதரவு திரட்டினார்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பஞ்சரத்னா யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமை ஏற்று நடத்தி வருகிறார். இதன் முதல்கட்ட யாத்திரை கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி முல்பாகலில் தொடங்கியது. தென் பகுதியில் அதாவது கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், பெங்களூரு, துமகூரு, ராமநகர், மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்த முதல்கட்ட யாத்திரை கடந்த 31-ந் தேதி நிறைவடைந்தது. முதல்கட்ட யாத்திரை 35 நாட்கள் நடத்தப்பட்டது. இடையில் மழை உள்ளிட்ட சில காரணங்களால் யாத்திரை சில நாட்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் 34 தொகுதிகளில் தொண்டர்களை குமாரசாமி சந்தித்து ஆதரவு திரட்டினார். சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை வட கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பீதரில் தொடங்கி கலபுரகி மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இந்த யாத்திரையை நடத்த குமாரசாமி திட்டமிட்டுள்ளார். அதாவது இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பீதர் மாவட்டத்திலும், 9-ந் தேதி முதல் கலபுரகி மாவட்டத்திலும் யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையை வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதி வரை நடத்த குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

இந்த பஞ்சரத்னா யாத்திரையின் இறுதி பொதுக்கூட்டத்தில் மைசூருவில் நடத்த ஜனதா தளம் (எஸ்) முடிவு செய்துள்ளது. அக்கட்சி 93 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் முன்கூட்டியே முதல் கட்சியாக ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story