ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம்: 2-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்


ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம்: 2-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
x

ராகுல் காந்தி பேச்சு மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தொடர்ந்து 2-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக சமீபத்தில் லண்டனில் பேசியிருந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளிலேயே பா.ஜனதா உறுப்பினர்கள் அவையில் போர்க்கோலத்தில் இறங்கினர்.

அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதானி விவகாரத்தையும் அவையில் எழுப்பி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியதால் நேற்று முன்தினம் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

2-வது நாளாக அமளி

இந்த விவகாரம் 2-வது நாளாக நேற்றும் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. மக்களவை காலையில் கூடியதும், வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஆளுங்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முழக்கமிட்டனர். கடந்த காலங்களில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் பேசிய குறிப்புகள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அவற்றுடன் அவையின் மையப்பகுதியில் குவிந்த அவர்கள், அதானி விவகாரத்தையும் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

சபாநாயகர் வேண்டுகோள்

இவ்வாறு அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். கேள்வி நேரத்துக்குப்பின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு வாய்ப்பு தருவதாக வேண்டுகோள் விடுத்த அவர், நாடாளுமன்ற நடவடிக்கையில் கேள்வி நேரம் முக்கியமானது எனக்கூறினார்.

ஆனால் சபாநாயகரின் வேண்டுகோளை எம்.பி.க்கள் காதில் வாங்கவில்லை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இந்த அமளி தொடரவே, அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் கூடியபோதும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா உறுப்பினர்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியினரும் பிடிவாதமாக இருந்தனர்.

இவ்வாறு அமளி தொடர்ந்ததால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

மாநிலங்களவை ஒத்திவைப்பு

இதற்கிடையே மாநிலங்களவையும் இந்த பிரச்சினைகளால் நேற்றும் ஸ்தம்பித்தது. காலையில் அவை கூடியதும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறு இருந்தனர்.

அதேநேரம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்துள்ள நோட்டீசுகளை அவைத்தலைவர் நிராகரித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதானி பிரச்சினையை மிகவும் தீவிரமாக எழுப்பி கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மாநிலங்களவை கட்சித்தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் 2 நாட்களும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியிருப்பது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story