புதிய கட்டிடத்தில் சபை தொடங்கும்போது அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை; காங்கிரஸ் கோரிக்கை


புதிய கட்டிடத்தில் சபை தொடங்கும்போது அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை; காங்கிரஸ் கோரிக்கை
x

அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அறிவிப்புடன் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்றம் செயல்பட தொடங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

புதுடெல்லி,

அதானி குழுமம், பங்குகளின் விலையை செயற்கையாக மாற்றி அமைத்து கொள்ளை லாபம் ஈட்டியதாகவும், கணக்குகளில் தில்லுமுல்லு செய்ததாகவும், வரிவிலக்கு உள்ள நாடுகளை தவறாக பயன்படுத்தியதாகவும் 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க அமைப்பு கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டியது.

இதனையடுத்து, பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது. அதானி குழுமம் மீதான புகார்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பி உள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

அதானி குழும முன்னாள் ஒப்பந்ததாரர் ஒருவர், அதானி குழுமத்தின் உள்விவகாரங்களை நன்கு அறிந்தவர். அவர் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் நலன் கருதி, அதானி விவகாரத்தில் தலையிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார். மேலும், அதானி மெகா ஊழல் குறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' முறையாக விசாரணை நடத்த தவறியதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவை இரண்டும், அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுவடைய செய்துள்ளன.

19-ந் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்குகிறது. பிரதமர் மோடியிடம் மறைப்பதற்கு உண்மையிலேயே எதுவும் இல்லாவிட்டால், அதானி குழும ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும் அறிவிப்புடன், புதிய கட்டிடத்தில் புதிய அத்தியாயத்தை நாடாளுமன்றம் தொடங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story