விநாயகர் சதுர்த்தி தினத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர்...!
விநாயகர் சதுர்த்தி தினத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி,
நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமர்வு வரும் 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனிடையே, டெல்லியில் வரும் சனிக்கிழமை ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு வரும் 9-ம் தேதி மாலை ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார். அதற்காக ஜனாதிபதி மாளிகை சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய ஜனாதிபதி என்று குறிப்பிடுவதற்கு பதில் பாரத ஜனாதிபதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழால் சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரதம்' என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதேவேளை, வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என்று மாற்ற மத்திய அரசு மசோதா தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் நாளில் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் 2ம் நாளான 19ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் 19ம் தேதி முதல் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.