பேடிஎம் ஊழியர்கள் 1000 பேர் பணிநீக்கம்.. பங்குகள் வீழ்ச்சி


பேடிஎம் ஊழியர்கள் 1000 பேர் பணிநீக்கம்.. பங்குகள் வீழ்ச்சி
x

பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், செலவினங்களை குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விற்பனை, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

செலவினங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவினங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பேடிஎம் செய்தித் தொடர்பாளர், நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மார்க்கெட்டிங் குழுவில் உள்ள பணியாளர்கள் குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். அக்டோபர் மாத தொடக்கத்தில் பணிநீக்க செயல்முறையை பேடிஎம் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்குறைப்பைத் தொடர்ந்து பேடிஎம் பங்குகள் இன்று சரிவடைந்தன. இன்று காலை வர்த்தகத்தின்போது பேடிஎம் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.


Next Story