'மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்' - சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு
செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி,
இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மேஜர் ஜாஸ்மின் கவுர், மேஜர் நிகிதா நாயர் உதவியுடன் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்ற நிகழ்வின்போது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்.
சுதந்திர தினத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன். சில வாரங்களுக்கு முன்பு மணிப்பூரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் அமைதி திரும்பி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சில நாட்களாக மணிப்பூரில் நிலவி வரும் அமைதியை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என மணிப்பூர் மக்களையும், மாநில அரசையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.