பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது - நிர்மலா சீதாராமன்


பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது  - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 2 Feb 2024 8:03 PM IST (Updated: 2 Feb 2024 9:26 PM IST)
t-max-icont-min-icon

'திட்டங்களை அறிவித்தது மட்டுமின்றி, அவை மக்களை சென்றடைவதையும் உறுதி செய்தோம்' என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

2024-2025ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக(விக்சித் பாரத்) உருவாக்க பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு உழைத்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாதது ஏன்? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"பிரதமர் மீது மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் மக்களுக்கு ஆதரவான திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல், தகுதியான ஒவ்வொருவரும் இந்த திட்டங்களால் பயனடைவதை உறுதிசெய்ய கடுமையாக உழைத்தோம். நாங்கள் வாக்களித்ததைச் செய்தோம்.

கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தபோது, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழைப் பிரிவினருக்கு தொடர்ந்து வழங்கியது.

தங்களுக்கான திட்டங்களை பெற்றுத் தருவதற்காக ஒரு அரசு செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கும்போது, அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும்போது, எங்களுக்கும் நம்பிக்கை ஏற்படுகிறது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் எங்களை ஆசீர்வதித்தனர். அதேபோல் இந்த முறையும் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது."

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Next Story