மேதாபட்கருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரசை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி


மேதாபட்கருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரசை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி
x

கோப்புப்படம்

சமூக சேவகர் மேதாபட்கருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரசை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆமதாபாத்,

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, பாவ்நகர் மாவட்டம் பலிதானா நகரில் நேற்று பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் கொள்கையே பிரித்தாள்வதுதான். குஜராத் மாநிலம் தனிமாநிலம் ஆவதற்கு முன்பு, குஜராத்திகளையும், மராட்டியர்களையும் காங்கிரஸ் ஒருவருக்கொருவர் மோத விட்டது. தனிமாநிலம் ஆன பிறகு, வெவ்வேறு சாதிகளையும், வகுப்புகளையும் ஒன்றுக்கொன்று மோத தூண்டி விட்டது.

காங்கிரசின் இந்த பாவங்களால் குஜராத் பெரிதும் பாதிக்கப்பட்டது. அக்கட்சியின் வியூகத்தை புத்திசாலிகளான குஜராத் மக்கள் புரிந்து கொண்டனர். அனைவரும் ஒற்றுமையாக நின்று இத்தகைய பிளவு சக்திகளுக்கு கதவடைத்து விட்டனர்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறியது. கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் ஒற்றுமையாகி விட்டதால் காங்கிரஸ் தோற்று வருகிறது. குஜராத் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமானால், சாதியவாதம், வகுப்புவாதம், பிரித்தாளும் கொள்கை, ஓட்டுவங்கி அரசியல் ஆகியவற்றை அக்கட்சி கைவிட வேண்டும்.

மன்னிக்க மாட்டார்கள்

இருப்பினும், இந்தியாவை உடைக்க விரும்பும் சக்திகளை ஆதரிப்பவர்களுக்கு உதவ மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சி, நர்மதை ஆற்று நீர், வறட்சி நிலவும் சவுராஷ்டிரா பகுதிக்கு செல்வதை தடுக்க முயற்சிக்கிறது.

சர்தார் சரோவர் அணை திட்டத்தை 40 ஆண்டுகளாக ஒருவர் (சமூக சேவகர் மேதாபட்கர்) தடுத்து நிறுத்தினார். அவருடன் பாதயாத்திரை சென்றவர்களை குஜராத் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் பேசினார்.


Next Story