மக்கள் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்த கூடாது; மந்திரி ஆனந்த்சிங் பேச்சு


மக்கள் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்த கூடாது; மந்திரி ஆனந்த்சிங் பேச்சு
x

மந்திரி ஆனந்த்சிங்

மக்கள் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்த கூடாது என்று சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆனந்த்சிங் கூறினார்.

பெங்களூரு:

சுற்றுச்சூழலை பாதுகாக்க...

கர்நாடக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பெங்களூருவில் உள்ள சென்டிரல் கல்லூரி ஞானஜோதி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆனந்த்சிங் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இயற்கையை நாசப்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் வரும் தலைமுறைக்கு மோசமான சுற்றுச்சூழலை வழங்கும் நிலை ஏற்படும். இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் என்ன ஆகும் என்பதை நாம் அனுபவித்துள்ளோம். கொரோனா பெயரில் இயற்கை நம்மை வீடுகளில் முடக்கி வைத்தது. இது தான் இயற்கையின் பலம்.

குழந்தைகளுக்கு இன்று முதலே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்து கூற வேண்டும். இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் தங்களின் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்த கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் முதன்மையான கடமை.

இவ்வாறு ஆனந்த்சிங் பேசினார்.

ஓவிய போட்டி

தபால்துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எல்.கே.தாஸ், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர், முதன்மை செயலாளர் விஜயமோகன் ராஜ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாந்த் திம்மையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி-கல்லூரிகளில் ஓவிய போட்டி நடைபெற்றது.

அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மந்திரி ஆனந்த்சிங் பரிசுகள் வழங்கி பாராட்டினார். 2021-22-ம் ஆண்டிற்கான கர்நாடக மாநில சுற்றுச்சூழல் விருது கோலார் மாவட்டம் ராஜசேகர், தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த மாதவ உல்லால் ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமைப்பு பிரிவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் மற்றும் ராய்ச்சூர் பசுமை ராய்ச்சூர் அமைப்புக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது.


Next Story