பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட தடைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு
பிரதமர் மோடி குறித்த பி.பி.சி. ஆவணப்படத்துக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பி.பி.சி. ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக வெளியிடப்பட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடிப் பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும், இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்துக்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி குறித்த பி.பி.சி. ஆவணப்படத்துக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை முறையிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.