பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்; மல்லிகார்ஜூன கார்கே பேச்சால் வெடித்தது சர்ச்சை


பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்; மல்லிகார்ஜூன கார்கே பேச்சால் வெடித்தது சர்ச்சை
x
தினத்தந்தி 27 April 2023 5:31 PM IST (Updated: 27 April 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பேசியது சர்ச்சையாக வெடித்து உள்ளது.

கலபுரகி,

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பேரணி, கட்சி பொது கூட்டத்திலும் கலந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவின் கலபுரகியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என நீங்களே யோசித்து பார்க்கலாம். நீங்கள் அதனை நக்கினால், மரணம் அடைந்து விடுவீர்கள் என்று பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரியான ஷோபா கரந்த்லஜே கூறும்போது, மல்லிகார்ஜூன கார்கே ஒரு மூத்த தலைவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

அவர் இந்த உலகிற்கு என்ன கூற வருகிறார்? பிரதமர் மோடி நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவரை ஒட்டுமொத்த உலகமும் மதிக்கிறது. இதுபோன்று பேசுவது காங்கிரஸ் எந்த மட்டத்திற்கு கீழ்நோக்கி போயுள்ளது என காட்டுகிறது. அவர் (கார்கே) நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, கார்கேவின் மனதில் விஷம் உள்ளது. அரசியல் ரீதியாக பிரதமர் மோடியை எதிர்த்து போராட முடியாத சூழலில், அவர்களது கப்பல் மூழ்கி கொண்டிருக்கிறது என அவர்கள் பார்க்கும்போது, நம்பிக்கையற்றபோது இதுபோன்ற எண்ணங்கள் வருகின்றன. மக்கள் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.


Next Story