ஆந்திரா, கேரளாவுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம்
அவருடைய கொச்சி பயணத்தின்போது, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி வருகிற 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் முறையே ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு வருகை தர இருக்கிறார். அவர் இந்த பயணத்தின்போது பல்வேறு திட்டங்களை துவக்கியும், நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் செய்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
அவர் 16-ந்தேதி மாலை 3.30 மணியளவில், ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தின் பாலசமுத்திரம் பகுதிக்கு சென்று தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதை பொருட்களுக்கான அகாடமியின் புதிய வளாகத்தினை தொடங்கி வைக்கிறார்.
இந்த அகாடமி 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன்பின், வருகிற 17-ந்தேதி காலையில் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி பூஜை மற்றும் தரிசனம் செய்ய இருக்கிறார்.
இதன்பின்பு, காலை 10.30 மணியளவில் திரிப்ராயர் ஸ்ரீ ராமசாமி கோவிலில் அவர் பூஜை மற்றும் தரிசனம் மேற்கொள்வார். நண்பகலில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி துறைகளுடன் தொடர்புடைய முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அவருடைய கொச்சி பயணத்தின்போது, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.