ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் ஆய்வு: கட்டுமானக்குழு தகவல்


ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் ஆய்வு: கட்டுமானக்குழு தகவல்
x

அயோத்தியில் பிரமாண்டமாக நடந்து வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் ஆய்வுசெய்ய உள்ளதாக கட்டுமானக்குழு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அப்போது முதல் மின்னல் வேகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.

இந்த கோவில் கட்டுமான பணிகளை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாக கட்டுமான குழு தெரிவித்து உள்ளது.

கட்டுமானக்குழு தலைவரான நிரிபேந்திர மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் பார்வையிடலாம்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

கோவில் கட்டுமானப்பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், 2023-ம் ஆண்டு டிசம்பருக்குள் ராம பிரானின் முன்பு பக்தர்கள் வேண்டுதல் செய்ய வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கர்ப்ப கிரகம் மற்றும் 5 மண்டபங்கள் அடங்கிய தரைத்தளத்துடன் 3 மாடி ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக கூறியுள்ள கட்டுமானக்குழு, அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தற்போது அது வேகமெடுத்து இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளது.


Next Story