புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
x

ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய மத்திய செயலகம் என்ற புதிய திட்டத்தை 'சென்டிரல் விஸ்டா' என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினர்.

ரூ.1,250 கோடி செலவில்...

தொடர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபரில் பூமி பூஜை நடைபெற்றது. அதே ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியா கேட்டில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துடன் ஜனாதிபதி மாளிகை வரையிலான புனரமைப்புகள் அனைத்தும் 'சென்டிரல் விஸ்டா' திட்டத்தில் அடங்கும். இதற்காக ரூ.13 ஆயிரத்து 450 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பின்னர் செலவுகள் உயர்ந்து சுமார் ரூ.21 ஆயிரம் கோடி வரை சென்றுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம், பழைய கட்டிடத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.862 கோடி ஆகும். ஆனால் அதன்பிறகு செலவுகள் உயர்ந்ததால் ரூ.971 கோடிக்கு டாடா குழுமம் ஏலம் எடுத்தது. அதன்பிறகும் செலவுகள் உயர்ந்து தற்போது சுமார் ரூ.1,250 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் 4 மாடிகளை கொண்டது. சுமார் 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுமானத்துக்காக 63 ஆயிரத்து 807 டன் சிமெண்டும், 26 ஆயிரத்து 45 டன் இரும்பும், 9 ஆயிரத்து 689 டன் சாம்பல் கலவையும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலைநாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.கட்டுமானத்தில் மக்களவை மயில் அமைப்பிலும், மாநிலங்களவை தாமரை அமைப்பிலும் உருவாக்கப்பட்டு உள்ளன.

செங்கோல்

எதிர்வரும் 150 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடத்தின் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கட்டிடக்கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. இதைப்போல கட்டிட பணியிலும் நாட்டின் அனைத்து பகுதி தொழிலாளர்களும், நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இன்று திறப்பு

இப்படி பல்வேறு அம்சங்களுடன் கட்டப்பட்ட இந்த புதிய நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் புதிய சின்னமாக வெளிப்படுகிறது. இந்த பிரமாண்ட கட்டிடம் பிரதமர் மோடியால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனவே விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இருந்தபோதிலும் திட்டமிட்டபடி இன்று திறப்பு விழா நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன்படி திறப்பு விழா 2 கட்டமாக நடக்கிறது. காலை 7.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சிதொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி

இதனைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மக்களவைக்குள் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை பிரதமர் கவுரவிக்கிறார்.

இதன்பின்னர் காலை 9.30 மணிக்கு சங்கராச்சாரியார்கள் மற்றும் பண்டிதர்கள், துறவிகள் பங்கேற்கும் பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது. இத்தோடு விழாவின் முதல்கட்டம் முடிவடைகிறது.

பின்னர் 2-ம் கட்ட விழா பகல் 12 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்குகிறது. அப்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். விழாவில் 2 குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. தொடர்ந்து மாநிலங்களவை துணைத்தலைவர் வரவேற்று பேசுகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் வாழ்த்துரை வாசிக்கப்படுகிறது. தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேசுகிறார்.

நாணயம், தபால்தலை வெளியீடு

நிகழ்ச்சியில் சுதந்திர அமிர்த பெருவிழாவின் நினைவாக ரூ.75 நாணயம் மற்றும் விழாவை நினைவுகூரும் தபால் தலையும் வெளியிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்துபிற்பகல் சுமார் 2.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

25 கட்சிகள்

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மத்திய மந்திரிகள், பல மாநில முதல்-மந்திரிகள், 25 கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், எம்.பி.க்கள், தமிழ்நாட்டில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் உள்பட 20 ஆதீனங்கள், ஊடக அதிபர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 20 எதிர்க்கட்சிகள் இதனை புறக்கணித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

மோடியிடம்செங்கோல் ஒப்படைப்பு

இதற்கிடையே நாடாளுமன்ற திறப்பு விழாவிற்காக தமிழ்நாட்டில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 20 ஆதீனங்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் நேற்று மாலை பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

பிரதமரும் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்று ஆசி பெற்றுக்கொண்டார். பின்னர் பிரதமரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. செங்கோல் ஒப்படைக்கப்பட்டபோது வேத மந்திரங்கள் மற்றும் தேவார திருவாசகம் பாடல்கள் பாடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story