10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை: நாளை திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை: நாளை திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
x

கோப்புப்படம்

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய பா.ஜ.க. அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை கொள்கை முனைப்பு திட்டம்போல (மிஷன் மோட்) கருதி செயல்பட வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி நாளை (22-ந் தேதி) தொடங்கி வைக்கிறார். இதையொட்டி நடக்கிற நிகழ்ச்சியில் அவர் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொள்கிறார். 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

இதையொட்டி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை 22-ந் தேதி காலை 11 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுகிற 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும். இது தொடர்பாக பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவின்பேரில், எல்லா அமைச்சகங்களும், துறைகளும் அனுமதிக்கப்பட்ட பணி நியமனங்களுக்கு நிகராக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தீவிரமாக செயல்படுகின்றனர்.

நாடு முழுவதும் புதிதாக வேலைக்கு எடுக்கப்படுகிறவர்கள் மத்திய அரசின் 38 அமைச்சகங்களிலும், துறைகளிலும் சேருவார்கள். அவர்கள் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என பல்வேறு மட்டங்களில் பணிபுரிவார்கள். மத்திய ஆயுதப்படை போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், குமாஸ்தாக்கள் (எல்டிசி), சுருக்கெழுத்தர் (ஸ்டெனோ), நேர்முக உதவியாளர் (பிஏ), வருமான வரி ஆய்வாளர்கள், பல்பணி ஊழியர்கள் (எம்டிஎஸ்) என பல்வேறு பணிகளுக்கு இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன.

யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே பணியாளர் வாரியம் என பணி நியமன ஆள் தேர்வு செய்யும் பல்வேறு அமைப்புகள் மூலம் இந்த பணி நியமனம் செய்யப்படுகிறது. விரைவான பணி நியமனத்துக்காக தேர்வுமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story