பிரதமர் மோடி 4 வழி விரைவு சாலையை தொடங்கி வைக்க கான்பூர் வருகை
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகருக்கு, 6 மாவட்டங்களை இணைக்கும் 4 வழி விரைவு சாலை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி விமானத்தில் இன்று வந்திறங்கினார்.
கான்பூர்,
உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29ந்தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கி.மீ. நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஆரையா மற்றும் எட்டாவா ஆகிய 6 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா-லக்னோ விரைவு சாலையுடன் இணைகிறது.
உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புந்தேல்கண்ட் விரைவு சாலை பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கம் அளிக்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகருக்கு விமானத்தில் இன்று வந்திறங்கினார். அவரை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன்பின்னர் பிரதமர் மோடி ஜலான் நகருக்கு செல்கிறார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.