திரிபுராவில் நடைபெறும் பேரணிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில் நடைபெறும் பேரணிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அகர்தலா,
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில், பிப்ரவரி 11(இன்று) மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இன்று மதியம் 12 மணியளவில் தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா பகுதியிலும், 3 மணிக்கு கோமதி என்ற பகுதியிலும் நடைபெறும் பேரணிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.