பீகாரில் தொடரும் விஷ சாராய கலாசாரம்: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் 3 பேர் பலியானதுடன், 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுக்கு செல்லப்பட்டு உள்ளனர்.
சிவான்,
பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிரான கடுமையான கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசு அமல்படுத்தி அதனை கடைப்பிடித்து வருகிறது. முதல்-மந்திரி நிதீஷ் குமார் உத்தரவின் பேரில் மாநிலத்தில் மதுபான தடை அமலில் உள்ளது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது.
இந்த விவகாரம் பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்துள்ளது. இதற்காக 9 பேர் கொண்ட ஆணைய உறுப்பினர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பீகாரில் சிவான் மாவட்டத்தில் லகாரி நபிகஞ்ச் பகுதியில் பாலா கிராமத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேருக்கு நேற்றிரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக உறவினர்கள் அவர்களை சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் அவர்கள் உயிரிழந்து விட்டனர். அவர்கள் ஜனக் பியான் என்ற ஜனக் பிரசாத், நரேஷ் பியான் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்றும் ஒருவரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இவர்கள் தவிர, 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் போலீசார் முகாம்களை அமைத்து உள்ளனர். விஷ சாராயத்திற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
இதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் அமித் குமார் பாண்டே நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பீகாரில் ஆளும் கட்சி உறுப்பினர்களே சட்டவிரோத மதுபான உற்பத்தி ஆலைகளுடன் தொடர்பில் உள்ளனர் என்று பா.ஜ.க. தொடர்ந்து அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.
பீகாரின் வைஷாலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஹாஜிப்பூர் நகர பகுதிகளில் மதுபான பாட்டில்கள் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்படுகிறது என்றும் தகவல் வெளியானது. இதுபற்றி கலால் துறையும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.