பெங்களூருவில் 500 கேளிக்கை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை


பெங்களூருவில் 500 கேளிக்கை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:45 PM GMT)

சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து பெங்களூருவில் 500 கேளிக்கை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பெங்களூரு:

பெங்களூருவில் எம்.ஜி.ரோடு, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மதுபான விடுதிகள், 'ஹூக்கா' பார், கேளிக்கை விடுதிகள் (பப்) உள்ளன. இந்த நிலையில் கேளிக்கை விடுதிகளில் சிறுவர், சிறுமிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள கேளிக்கை விடுதிகளில் சோதனை நடத்த போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் கோரமங்களா, எம்.ஜி.ரோடு, ஹெண்ணூர், பேகூர், பசவனகுடி உள்பட பல்வேறு இடங்களில் கேளிக்கை விடுதிகள், 'ஹூக்கா' பார்களில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின்போது 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் மது விருந்தில் கலந்து கொண்டது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலி ஆதார் அடையாள அட்டைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை கூறி போலீசாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவர், சிறுமியருக்கு விடுதிகளில் அனுமதி வழங்கினால் சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதி மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். பெங்களூரு நகரில் மொத்தம் 500 கேளிக்கை விடுதிளில் இந்த சோதனை நடந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில், 'பெங்களூருவில் உள்ள கேளிக்கை விடுதிகள், ஹூக்கா பார்களில் சட்டவிரோதமாக சட்டவிரோதமாக சிறுவர்-சிறுமிகள் அனுமதிக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாணவர்கள் பலர் மீட்கப்பட்டனர். கேளிக்கை விடுதிகளில் மாணவர்களுக்கு மதுபானம், போதைப்பொருள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


Next Story