சிவமொக்காவில் 241 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை


சிவமொக்காவில்  241 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:45 PM GMT)

சிவமொக்கா மாவட்டத்தில் 241 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தில் 241 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மீலாதுநபி பண்டிகை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும், மீலாது நபி ஊர்வலமும் ஒரே நாளில் நடக்கிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு பிரிவினரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், மாவட்டத்தில் உள்ள பதற்றமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலம், மீலாது நபி ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சிவமொக்காமாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உத்தரவிட்டார்.

போலீஸ் அதிரடி சோதனை

அதன்படி, சிவமொக்கா மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ரவுடிகளின் வீடுகளில் நேற்று காலை அதிரடி சோதனை நடந்தது. இதில், சிவமொக்கா டவுன் பகுதியில் 39 வீடுகளிலும், புறநகர் பகுதியில் 38 வீடுகள், பத்ராவதியில் 72 வீடுகள், சிகாரிப்புராவில் 27வீடுகள், தீர்த்தஹள்ளியில் 44 வீடுகள் உள்பட மாவட்டம் முழுவதும் 241 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், கஞ்சா, போதைப்பொருள், ஆயுதங்கள் இருக்கிறதா? என சோதனை செய்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், மீலாது நபி ஊர்வலம் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகிறது.

ரவுடிகளுக்கு எச்சரிக்கை

இதனால், பிரச்சினை நடைபெறுவதை தடுக்க சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போதைப்பொருள், ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை.

மேலும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என ரவுடிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story