அரசியல் கட்சிகளின் பெயரில் மதம் சார்ந்த பெயர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மத பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத அடையாளங்களுடன் கூடிய பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
சையத் வசீம் ரிஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரசியல் கட்சிகளின் பெயரில், மதம் சார்ந்த பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் கட்சிகளின் பெயர்களில் மதம் சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை எதிர்த்து மனுதாரர் வாசிம் ரிஸ்வி தாக்கல் செய்த மனுவில், மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதமானது என்றால், கட்சியின் பெயரையும் மத அடிப்படையில் வைக்க முடியாது என்று கூறியிருந்தார்.
பல அரசியல் கட்சிகள் மதப் பெயர்களையும் சின்னங்களையும் பயன்படுத்துவதாகவும், அவர்களின் கொடிகளில் அத்தகைய சின்னங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்து ஏக்தா தளம் போன்ற கட்சிகளை உதாரணம் காட்டினார்.
அவ்வாறு செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இது தவிர, மதப் பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அக்டோபர் 18-ம் தேதிக்குள் பதில் அனுப்ப இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை ஒரு கட்சியாக்க மனுதாரருக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும்.