ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு


ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு
x

ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

பிளாஸ்டிக், பாலிதீன் பைகளையும், மனிதர்களையும் பிரிக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. கடைகளுக்கு கைவீசி சென்றுவிட்டு பொருட்களை வாங்கி பிளாஸ்டிக் பைககளில் போட்டு வந்து நமக்கு பழக்கமாகிவிட்டது.

வணிக வளாகங்கள்

இந்த பாலிதீன் பைகள் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நமது அரசுகள் தற்போது புரிந்து கொண்டுள்ளன. அதனால் தான் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இதே போன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடுகளில் இருந்து வரும்போது, நூல் பைகளை கொண்டு வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பைகளை உடன் கொண்டு வராதவர்கள் பொருட்களை வாங்கினால், அவர்களுக்கு அங்கேயே ரூ.10, ரூ.20-க்கு பைகள் வழங்கப்பட்டு பொருட்கள் கொடுத்து அனுப்பப்படுகின்றன. பெரிய வணிக வளாகங்கள், இதர பெரிய கடைகளில் இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் சிறிய உணவகங்கள், தேநீர் கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றில் இன்னமும் பாலிதீன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.

சூடான உணவு பொருட்கள்

இதை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணியை பெங்களூரு மாநகராட்சி உள்பட நகர உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இன்னொரு புறம் இந்த பாலித்தீன் பைகள் சூடான உணவு பொருட்களை பார்சலாக கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. அதாவது தேநீர் கடைகளில் சிறிய பாலிதீன் பையில் தேநீரை நிரப்பி பாா்சல் வழங்குகிறார்கள். உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர் மீது உணவுகளை போட்டு பரிமாறுகிறார்கள்.

அதுவும் சூடான தேநீர், உணவுகளை பிளாஸ்டிக் மீது பயன்படுத்துவதால், அது பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அறியாமல் இந்த உணவகங்கள் பிளாஸ்டிக் பைகளை உணவு பார்சல்களுக்கு பயன்படுத்துகின்றன. நுகர்வோரும், உணவுகளை பிளாஸ்டிக் பைகள், அவற்றின் பெட்டிகளில் பெற்று செல்கிறார்கள் அல்லது அவற்றை பயன்படுத்தி உணவுகளை சாப்பிடுகிறார்கள்.

ரசாயன பொருட்கள்

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுகளை பயன்படுத்துவதால் அந்த பிளாஸ்டிக் நமது கண்ணுக்கு தெரியாத அளவில் உருகி அது உணவுடன் கலந்து நமது வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் அதில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட ரசாயன பொருட்களின் மூலம் பலவிதமான நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுமக்களில் ராஜாஜி நகரை சேர்ந்த சிவா என்பவர் கூறுகையில், "நாங்கள் சில நேரங்களில் தேநீரை பிளாஸ்டிக் பையில் பார்சல் வாங்கி வந்து பயன்படுத்துவது உண்டு. அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று எங்களுக்கு தெரியாது. அவசரத்திற்காக வேறு வழியின்றி பிளாஸ்டிக் பையை பயன்படுத்துகிறோம். பிற்காலத்தில் வரும் பாதிப்புகள் என்ன என்பது தெரியாது. வரும் நாட்களில் இத்தகைய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிா்க்க முயற்சி செய்வேன்" என்றார்.

எந்த பாதிப்பும் ஏற்படாது

பெங்களூரு சிவாஜிநகரை சேர்ந்த தேநீர் கடை உரிமையாளர் ஜமால் கூறுகையில், "பிளாஸ்டிக் கவரில் நாங்கள் தேநீர் பார்சல் கொடுக்கிறோம். அந்த பிளாஸ்டிக் கவர்களின் விலை மிக குறைவாக உள்ளது. அதனால் நாங்கள் அதை பயன்படுத்துகிறோம். மேலும் அந்த கவர்களை கையாளுவதில் எங்களுக்கு மிகவும் எளிமையாக உள்ளது. அதனால் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறோம்" என்றார்.

அதே சிவாஜிநகர் பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தேநீர் கடை உரிமையாளரிடம் கேட்டபோது, "நானும் தேநீர் பார்சல் கேட்கிறவர்களுக்கு பிளாஸ்டிக் கவரை தான் பயன்படுத்துகிறேன். சிறிது தூரத்திற்கு அந்த பார்சல் எடுத்து சென்ற உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்கிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

வேறு வழியில்லை

சிவமொக்கா தீர்த்தஹள்ளி சாலையில் கேண்டீன் நடத்தி வரும் நாகராஜ் கூறுகையில், "உணவு பொருட்கள் விலை, சமையல் எரிவாயு விலை, வேலை ஆட்களுக்கு சம்பளம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டி உள்ளது. வாழை இலை விலை அதிகமாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில் வாழை இலை கிடைப்பதில்லை. பார்சல் கட்டுவதற்கு வாழை இலைகைள விட பாலிதீன் பைகள் எங்களுக்கு சவுகரியமாக உள்ளது. உணவு பொருட்கள் பார்சல் வாங்க வரும் மக்கள், சாம்பார் உள்ளிட்டவற்றை வாங்க பாத்திரம் கொண்டு வருவதில்லை.

பாலிதீன் பைகளில் தான் சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி செல்கிறார்கள். பொதுமக்களே பாலிதீன் பைகளில் உணவு பொருட்களை கொடுக்கும்படி கேட்கிறார்கள். சூடான சாம்பாரையும் பாலிதீன் பையில் தான் கட்டி கொடுக்க வேண்டி உள்ளது. உடலுக்கு தீங்கு ஏற்படும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என தெரிந்தும் வேறு வழியில்லாமல் பாலிதீன் பைகளை பயன்படுத்தி வருகிறோம்" என்றார்.

ஆரோக்கியத்துக்கு நல்லது

சிக்கமகளூரு ரத்தினகிரி சாலையில் உள்ள சைவ உணவக உரிமையாளர் கார்த்திக் ஜி.கே. கூறுகையில், "எனது ஓட்டலில் பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு வழங்கினாலும் அதன் மேல் வாழை இலை போட்டு தான் உணவு வழங்குகிறோம். அதுபோல் மதியம் நமது கலாசாரப்படி வாழை இலை போட்டு உணவு வழங்குகிறோம். பல ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் இந்த நடைமுறை மாறிவிட்டது. இதனால் வாழை இலையில் உணவு சாப்பிட வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஓட்டல்களில் பாலிதீன் பைகளில் சாப்பாடு வாங்குவதும், டீக்கடைகளில் பார்சல் டீகளை பாலிதீன் பைகளில் வாங்குவதும் நமது உயிருக்கு நாமே வைக்கும் உலை.

சூடாக இருக்கும் உணவு, டீயை பாலிதீன் பைகளில் வாங்குவதால் நமது கண்ணுக்கு தெரியாமல் பாலிதீன் பை துகள்கள் உடலில் செல்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே பாத்திரம் எடுத்து வந்து சாப்பாடு சாம்பார் வாங்கிச் சென்றால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது" என்றார்.

வாழை இல்லையில்...

பெங்களூரு இந்திரா நகரில் உணவகம் நடத்தி வரும் ரங்கராஜ் கூறுகையில், "பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தில் கையேந்தி பவன்கள், தள்ளுவண்டி கடைகள், சிறிய ஓட்டல்களில் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பாலிதீன் பைகள் போட்டு உணவுகள் பரிமாறப்படுகிறது. மேலும் பார்சலும் கட்டி கொடுக்கிறார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், சூடான உணவுகளை பாலிதீன் பைகளில் வைத்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க எனது கடையில் நாங்கள் வாழை இலையில் தான் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். வாழை இலையில் உணவு வழங்குவது தான் நமது கலாசாரம். ஆனால் மேற்கத்திய கலாசாரம் மற்றும் விலைவாசி உயர்வால் ஓட்டல்களில் வாழை இலை பயன்பாடு குறைந்துவிட்டது. வயிற்றுப் பசிக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவளிப்பது உத்தமமான செயல். அதனையே நாங்கள் தொடர்கிறோம்" என்றார்.

தவிர்க்க முடியாததாகி விட்டது

சிவமொக்காவை சேர்ந்த வியாபாரி கேசவன் கூறுகையில், 'பெரிய ஓட்டல்கள் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை பாலிதீன் பைகளில் தான் உணவு கட்டி தருகிறார்கள். பாலிதீன் கவரில் சூடான உணவு பொருளை சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். இது தெரிந்தும் பாலிதீன் கவரில் உணவு வாங்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. வீட்டுக்கு பார்சல் வாங்கி வந்தாலும் பாலிதீன் கவர்களில் தான் உணவு பொருட்களை கொடுக்கிறார்கள்.

இன்றைய அவசர உலகில் பாலிதீன் தவிர்க்க முடியாததாகி விட்டது. கடைக்கு சென்றாலும் பாலிதீன் பைகளை தான் கொண்டு செல்கிறோம். பெரிய ஓட்டல்களில் கூட வாழை இலை வைத்து உணவு கொடுக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. வாழை இலை கிடைப்பதில்லை என்றும், அதிக செலவாகிறது என்றும் கூறுகிறார்கள்' என்றார்.


Next Story