கோழிப்பண்ணை தொழிலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை


கோழிப்பண்ணை தொழிலாளி மர்மசாவு  கொலையா? போலீஸ் விசாரணை
x

நஞ்சன்கூடுவில் கோழிப்பண்ணை தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மைசூரு;

தொழிலாளி மர்ம சாவு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா சூரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில்கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் சூரள்ளியை சேர்ந்த சீனிவாச செட்டி (வயது 40) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் சுகன்யா. இவர்கள் குடும்பத்துடன் கோழிப்பண்ணையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கோழிப்பண்ணையில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது அருகில் ஒரு கல்லும், கழுத்தில் கயிறும் இருந்தது.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குவெம்புநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சீனிவாச செட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து குவெம்பு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story