குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு


குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு
x

பிரான்ஸ் பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

புதுடெல்லி,

நாட்டின் குடியரசு தின விழாவின்போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அதிபர் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதனால் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் அழைப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Next Story