'உண்மையை பேசியதற்கான விலை' - அரசு பங்களாவை காலி செய்த பின் ராகுல்காந்தி பேச்சு
காங்கிரஸ் மூத்த தலைவர் அரசு பங்களாவை இன்று காலி செய்தார்.
டெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி அவ்வாறு பேசினார்.
இந்த பேச்சை தொடர்ந்து மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதேவேளை, அவதூறு வழக்கில் குற்றவாளி என வழக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யும்படி ராகுல்காந்தி சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
இதனிடையே, அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும், ராகுல்காந்தி தனது அரசு பங்களாவை காலி செய்யும்படி மக்களவை செயலாளர் கடந்த 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை தொடர்ந்து தான் அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட 2005-ம் ஆண்டு முதல் டெல்லி 12 துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்துவந்த ராகுல்காந்தி இன்று பங்களாவை காலி செய்தார்.
அவரது பொருட்கள் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அவர் அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார்.
அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களிடம் எபெசிய ராகுல்காந்தி, இந்திய மக்கள் எனக்கு இந்த வீட்டை 19 ஆண்டுகள் கொடுத்தனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையை பேசியதற்கான விலை இது. உண்மையை பேசுவதற்கு எத்தகைய விலையையும் கொடுக்க நான் தயாராக உள்ளேன்' என்றார்.