பிரதமர் மோடி இன்று கேரளா செல்கிறார்
பிரதமர் வருகையையொட்டி கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
திருச்சூர்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கேரள மாநிலம் திருச்சூருக்கு வருகை தருகிறார். திருச்சூர் தேக்கின் காடு மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா மாநில மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இதற்காக பிரதமர் தனி ஹெலிகாப்டரில் லட்சத்தீவில் இருந்து திருச்சூர் அருகே குட்டநல்லூரில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு மாலை 3.15 மணியளவில் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்சூர் நகருக்கு வருகிறார். தொடர்ந்து 3.30 மணிக்கு ரோடு ஷோ செல்கிறார். இதையடுத்து மாலை 4.15 மணிக்கு மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைத்து பேச உள்ளார்.
மாநாட்டில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, நடிகை ஷோபனா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
பிரதமர் வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினர், கேரள போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் தேக்கின் காடு மைதானம் மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சூருக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர்.