மே.வங்கத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி


மே.வங்கத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
x

மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி பேசினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் ரெயில்வே திட்டங்கள், சாலைகள், மின்சாரம், அனல்மின் நிலையம் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் அடங்கும்.

அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;

"இன்று, வளர்ச்சியடைந்த மேற்கு வங்கத்தை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம். நேற்று, ரூ. 7,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன், துவக்கி வைத்தேன். இதில் ரெயில்வே, துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் அடங்கும். இன்று மீண்டும், 15,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கிறேன்

இந்த திட்டங்கள் மேற்கு வங்கத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். எங்கள் அரசாங்கம் சாலைகள், ரெயில்வே, நீர்வழி மற்றும் விமானப் போக்குவரத்து மூலமாக மேற்கு வங்கத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு திட்டத்தையும் ஊழலாக மாற்றுகிறது. நமது திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி, அவர்களுடையது என்கிறார்கள்.

மத்திய அரசு ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் மேற்கு வங்க மக்கள் பயனடைய திருணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் 2014க்கு முன், 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 26 ஆக உயர்ந்துள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான எண்ணற்ற வாய்ப்புகளை பா.ஜ.க. உருவாக்கும். இதற்கு மக்களவைத் தேர்தலில் உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story