டிக்கெட் கொடுக்காவிட்டாலும் கட்சிக்கு விசுவாசம்; ஈசுவரப்பாவை போனில் பாராட்டிய பிரதமர் மோடி


டிக்கெட் கொடுக்காவிட்டாலும் கட்சிக்கு விசுவாசம்; ஈசுவரப்பாவை போனில் பாராட்டிய பிரதமர் மோடி
x

டிக்கெட் கொடுக்காவிட்டாலும் கட்சிக்கு விசுவாசமாக நடந்துகொண்ட ஈசுவரப்பாவை பிரதமர் மோடி நேற்று போனில் தொடர்பு கொண்டு பேசி பாராட்டினார். மேலும் கட்சி உங்களுடன் எப்போதும் இருக்கும் என்று உறுதி அளித்தார்.

சிவமொக்கா:

மூத்த தலைவர்களுக்கு கல்தா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா மேலிடம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 72 புதுமுகங்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ. 28 பேருக்கு டிக்கெட்கொடுக்கவில்லை. அத்துடன் 60 வயதை கடந்த பா.ஜனதா மூத்த தலைவர்களை தேர்தல் அரசியலில் இருந்தும் ராஜினாமா செய்ய வைத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண்சவதி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டனர்.

அதுபோல் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா சிவமொக்கா தொகுதியில் டிக்கெட் எதிர்பார்த்து இருந்தார். அவருக்கும் அக்கட்சி டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, கட்சி மேலிடம் உத்தரவின் பேரில் அறிவித்துவிட்டார். இதனால் தனது மகன் காந்தேசுக்கு சிவமொக்கா தொகுதியில் டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால் அவருக்கும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சன்னபசப்பா என்பவர் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஈசுவரப்பாவின் விசுவாசம்

இதனால் ஈசுவரப்பா மற்றும் அவரது மகன், ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் கட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை. மேலும் ஈசுவரப்பா, கட்சி மேலிடத்தின் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாகவும், சன்னபசப்பாவின் வெற்றிக்காக நானும், எனது மகனும் பாடுபடுவோம் என்று அறிவித்தார். அத்துடன் தனது மகனின் செயல்பாட்டை பார்த்து வருகிற நாட்களில் பா.ஜனதா மேலிடம் அவருக்கு தகுதியான பதவி வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

டிக்கெட் கொடுக்காததால் மூத்த தலைவர்கள் விலகினாலும் ஈசுவரப்பா பா.ஜனதா வெற்றிக்காக பாடுபடுவதாக கூறிவருவதுடன் கட்சிக்காக விசுவாசமாக இருந்து வருகிறார். இதனால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி ஈசுவரப்பாவின் நடவடிக்கையால் உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி போனில் பேச்சு

இந்த நிலையில், நேற்று காலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஈசுவரப்பாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பிரதமர் மோடியின் உதவியாளர் பேசுவதாகவும், பிரதமர் உங்களுடன் (ஈசுவரப்பா) பேச இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஈசுவரப்பா உற்சாகம் அடைந்தார். பின்னர் ஈசுவரப்பாவுடன் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது சாதாரண தொண்டர் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். கர்நாடகத்திற்கு வரும் போது உங்களை சந்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உடனே தன்னுடன் பேசியதற்கு பிரதமர் மோடிக்கு ஈசுவரப்பா நன்றி தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட தனக்கும், மகனுக்கும் சீட் கிடைக்காத நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சால் ஈசுவரப்பா உற்சாகம் அடைந்துள்ளார்.

கனவிலும் நினைத்ததில்லை

இதுகுறித்து ஈசுவரப்பா நிருபர்களிடம் கூறுகையில், காலை 8.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. பிரதமர் மோடி என்னுடன் பேசினார். பிரதமர் மோடியே என்னுடன் இவ்வாறு பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட அவர் பேசுவார் என்று நினைத்ததில்லை.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைவர்கள் நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். கர்நாடகத்திற்கு வந்தால் என்னை சந்திப்பதாக பிரதமர் மோடி கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தேர்தல் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன்.

சாதாரண தொண்டனாக...

அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கர்நாடகத்தில் கட்சியை வளர்க்கும் பணிகளில் சாதாரண தொண்டனாக இருந்து ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தி இல்லை. அரசியல்வாதிகளுக்கு எது கிடைத்தாலும் திருப்தி ஏற்படாது. என்னை பொறுத்தவரை கட்சியின் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. கட்சி சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அதன்படி நடப்பேன். சிவமொக்காவில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக்காக சாதாரண தொண்டனாக உழைப்பேன். பா.ஜனதாவை விட்டு காங்கிரசுக்கு சென்ற தலைவர்கள், மீண்டும் பா.ஜனதாவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்றார்.


Related Tags :
Next Story