ஜார்கண்டில் ரூ.24 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
ராஞ்சி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் முன்பாக பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து புதிய திட்ட ப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணிக்கு ராஞ்சியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் லார்ட் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். அதன்பிறகு அவர் பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த இடமான உலிஹட்டு கிராமத்துக்கு செல்கிறார்.
காலை 11:30 மணியளவில் குந்தியில் 3-வது பழங்குடியின பெருமை தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியின்போது, பிரதமர் 'விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கிசான் திட்டத்தின் கீழ், அவர் 15வது தவணையாக சுமார் 18 கோடி ரூபாயை வழங்குகிறார். இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 14 தவணைகளில், 2.62 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜார்க்கண்டில் சுமார் ரூ. 7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முன்னதாக பழங்குடியினரின் பெருமை தினமான இன்று, அரசின் முக்கிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரை பிரசார வேனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் இருந்து தொடங்கும் இந்த வேன் பயணம் ஜனவரி 25-ந் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.