பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்து
மனிதகுல நன்மைக்கு ஒன்றாக உழைக்க ஊக்கம் ஏற்படுத்தும் பண்டிகை என பிரதமர் மோடி பக்ரீத் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு ஆண்டில் ஈத்-அல்-அதா அல்லது பக்ரீத் எனப்படும் தியாக திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கடவுளுக்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருந்த இப்ராகிமின் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினத்தில், முஸ்லிம்கள் புது ஆடைகளை அணிந்து, திறந்தவெளியில் ஒன்றாக கூடி தொழுகையில் ஈடுபடுவார்கள். மகிழ்ச்சி மற்றும் அமைதியை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடும் மக்கள், இந்த நாளில் பழைய பகைமைகள், வன்மம், வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை விடுத்து, ஒருவருடன் மற்றொருவர் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வார்கள்.
பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈத் முபாரக்! பக்ரீத் தின வாழ்த்துகள். மனிதகுலத்தின் நன்மைக்காக கூட்டாக இணைந்து நல்வாழ்வு மற்றும் செழுமை ஆகியவற்றை நோக்கி மனவுறுதியுடன் பணியாற்ற இந்த பண்டிகை தினம் நமக்கு ஊக்கம் அளிக்கட்டும் என தெரிவித்து உள்ளார்.