ஜப்பான், ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம்
ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி முறையே ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
புதுடெல்லி,
ஜப்பானிய தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த உச்சி மாநாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை பற்றி உறுப்பு நாடுகளுடனான ஜி-7 கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேச இருக்கிறார்.
உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், உறுதியான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசுகிறார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அதில் பங்கேற்கும் தலைவர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளையும் அவர் நடத்துகிறார்.
இதன்பின் பப்புவா நியூ கினியாவுக்கு 22-ந்தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.
இதனை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான 3 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
வருகிற 23-ந்தேதி இந்திய வம்சாவளியினர் முன் உரையாற்றுகிறார். வருகிற 24-ந்தேதி பிரதமர் அல்பானீசுடன் இருதரப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அந்நாட்டின் சி.இ.ஓ.க்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுடனும் அவர் உரையாட இருக்கிறார்.
Related Tags :
Next Story