பிரதமர் மோடி நாளை ஜம்மு பயணம்


பிரதமர் மோடி நாளை ஜம்மு பயணம்
x
தினத்தந்தி 19 Feb 2024 6:13 AM GMT (Updated: 19 Feb 2024 6:49 AM GMT)

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 20-ம் தேதி) ஜம்மு செல்கிறார். நாளை காலை 11:30 மணியளவில், ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் உள்ளார்.

குறிப்பாக ஜம்முவின் விஜய்பூரில் கட்டப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நிறைவு பெற்ற சாலை, ரெயில் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை. மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார். "விக்சித் பாரத் விக்சித் ஜம்மு" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதன்பிறகு ஜம்முவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story