இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்: மத்திய பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார், பிரியங்கா


இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்: மத்திய பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார், பிரியங்கா
x

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

ஜபல்பூர்,

பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால், பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

இந்த ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இடையில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

பிரசார பொதுக்கூட்டம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள ஜபல்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:-

225 ஊழல்கள்

மாநிலத்தில் 220 மாதங்கள் பா.ஜனதா ஆட்சியமைத்துள்ள நிலையில், 225 ஊழல்கள் நிகழ்ந்துள்ளன. வியாபம் ஊழல், ரேஷன் வினியோக ஊழல் என இந்த பட்டியல் நீள்கிறது. மாதத்துக்கு ஒரு புதிய ஊழலில் அரசு ஈடுபடுகிறது.

பா.ஜனதாவின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் வெறும் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன.

இந்த புள்ளி விவரங்கள் என்னிடம் வந்தபோது எனது அலுவலகத்தில் இருந்து ஒன்றுக்கு 3 முறை நான் பரிசோதித்தேன். அப்போது இது உண்மைதான் என அறிந்து கொண்டேன்.

இரட்டை என்ஜின் அரசு

மாநிலத்தில் ஆளும் சிவராஜ் சிங் சவுகான் அரசு கடவுளரை கூட விட்டு வைக்கவில்லை. அறநிலையத்துறை பணிகளிலும் நடந்த ஊழலால் உஜ்ஜைன் மகாகாளி தளத்தில் வைக்கப்பட்டிருந்த 6 சிலைகள் கடந்த மாதம் 28-ந்தேதி காற்றில் சேதமடைந்துள்ளன.

900 மீட்டர் நீளமுள்ள இந்த தளம் ரூ.856 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ரூ.351 கோடி மதிப்பில் பணி முடிக்கப்பட்ட முதல் கட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார்.

மாநிலங்களில் இரட்டை என்ஜின் ஆட்சி குறித்து பா.ஜனதா பேசி வருகிறது. ஆனால் ஏராளமான இரட்டை மற்றும் மூன்று என்ஜின் அரசுகளை பார்த்து விட்டோம். ஆனால் இமாசல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இந்த அரசுக்கு சரியான பதிலடியை மக்கள் கொடுத்து விட்டார்கள்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,500

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர், 100 யூனிட் இலவச மின்சாரம், பழைய ஓய்வூதிய திட்டம், விவசாய கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், இமாசல பிரதேசம், சத்தீஷ்காரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். கர்நாடகாவிலும் எங்கள் அரசு தேர்தலின்போது அளித்த 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் (ஜோதிராதித்ய சிந்தியா) அதிகாரத்துக்காக கட்சியின் சித்தாந்தத்தையே காற்றில் பறக்கவிட்டு சென்று விட்டனர் என்று பிரியங்கா கூறினார்.

நர்மதையில் வழிபாடு

முன்னதாக மத்திய பிரதேசத்தின் ஜீவாதாரமாக கருதப்படும் நர்மதை நதியில் பிரியங்கா வழிபாடு நடத்தினார். இதற்காக குவாரிகாட்டில் அவர் விநாயகர் சிலையுடன் சென்று வழிபாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில பொறுப்பாளர் ஜே.பி.அகர்வால் மற்றும் விவேக் தங்கா எம்.பி. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Next Story