ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு


ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM GMT (Updated: 27 March 2023 12:15 AM GMT)

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போராட்டம்

இதை கண்டித்து காங்கிரசார் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அங்கு சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், பவன் கெரா, பவன்குமார் பன்சால், சக்திசங் கோகில், ஜோதிமணி எம்.பி., பிரதிபா சிங், மணிஷ் சத்ரத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான கட்சி தொண்டர்களும் போராட்டக்களத்துக்கு வெளியே திரண்டு வந்து பங்கேற்றனர்.

சத்தியாகிரக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தாலும், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரியங்கா ஆவேசம்

இந்த போராட்டத்தின்போது பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பது நாட்டுக்கும், அதன் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல என்பதால், அராஜக அரசுக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் குடும்பத்தின் ரத்தம், நாட்டின் ஜனநாயகத்தை வளர்த்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்துக்காக நாங்கள் எதையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு அடித்தளம் போட்டவர்கள், காங்கிரசின் மாபெரும் தலைவர்கள்தான்.அவர்கள் (பா.ஜ.க.வினர்) எங்களை மிரட்டலாம் என கருதினால், அது தவறு. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். நேரம் வந்து விட்டது. இனியும் நாங்கள் அமைதி காக்க மாட்டோம்.

தியாக பிரதமரின் மகன்

நாட்டுக்காக தியாகம் செய்த பிரதமரின் மகன் நாட்டை அவமதிப்பாரா? தனது உயிரையே ஈந்த பிரதமருக்கு இது அவமதிப்பு. நீங்கள் (பா.ஜ.க.) தியாகியின் மகனை தேசவிரோதி என்கிறீர்கள். அவரது தாயாரை நாடாளுமன்றத்தில் அவமதித்தீர்கள். பிரதமரே, ஏன் இந்த குடும்பம் நேரு என்ற பின்பெயரை பயன்படுத்துவதில்லை என்று கேள்வி கேட்கிறார். நீங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவமதித்தீர்கள்.

இனி அமைதியாக இருக்க மாட்டோம்

இன்றைக்கு வரையிலும், எங்கள் குடும்பத்தை அவர்கள் அவமதித்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அமைதி காத்து வந்தோம். இனி அப்படி இருக்க மாட்டோம்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் லட்சோப லட்சம் பேர் இணைந்தார்கள்.நாட்டின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் நடைப்பயணம் மேற்கொண்டஒருவர் இந்த நாட்டை அவமதிப்பாரா?

பப்பு என்று அழைப்பதா?

ராகுல் காந்தி உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். ஆனால் அவரை இன்னும் பப்பு என்று அழைக்கிறார்கள்.ஆனால் அவர் பப்பு இல்லை, லட்சக்கணக்கான மக்கள் அவருடன் நடக்கிறார்கள் என்பதைக் கண்டதும், நாடாளுமன்றத்தில் அவர் கேள்விகளை எழுப்பியதைப் பார்த்தும், அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. கேள்வி கேட்கிற ஒருவர் தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டால், அது நாட்டுக்கு நல்லதல்ல. ஜனநாயகத்துக்கும் சரியல்ல. நேரம் வந்து விட்டது. பயப்படாதீர்கள்.அவர்களை எதிர்கொள்வதற்கான நேரம் வந்து விட்டது. ஒன்றுபடுவோம். நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்வோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்கே பேச்சு

இந்த போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் பேசினார். அவர் பேசும்போது, நாட்டைக் காக்க பணியாற்றுகிறவரை நீங்கள் தண்டிக்கிறீர்கள். நாட்டைக் கொள்ளையடித்தவரையோ வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறீர்கள். ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் ஆதரவு அளித்து, ஜனநாயகத்தைக் காக்க ஒன்றுபட்டு நிற்கிற எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுக்கு 100 முறை நன்றி சொல்கிறேன் என்று கூறினார்.

தமிழ்நாடு

தமிழகத்தில் 76 இடங்களில் போராட்டம் நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்றார்.

இது போல கேரளா, கர்நாடகா உள்பட அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது.


Next Story