உத்தரகாண்டில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகள்; அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
உத்தரகாண்டில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி பிரதமர் மோடி இன்று பேசினார்.
பித்தோராகார்,
உத்தரகாண்டில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி பித்தோராகார் பகுதியில் பார்வதி குந்த் பகுதியில் பூஜைகளை மேற்கொண்டார். அதன்பின்னர், ராணுவம், இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பினருடன் உரையாடினார்.
அல்மோரா மாவட்டத்தில் ஜாகேஷ்வர் தம் கோவிலில் அவர் இறைவணக்கமும் மேற்கொண்டார். இதன்பின்பு, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி பிரதமர் மோடி இன்று பேசினார்.
அவர் பேசும்போது, ஒவ்வோர் இடத்திலும் மூவர்ண கொடி உயர பறக்கிறது என்றார். சந்திரயான் திட்டத்தின் வெற்றி மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை இந்தியா வென்றது ஆகியவற்றை நினைவுகூர்ந்து பேசினார்.
அவர் பேசும்போது, இது உத்தரகாண்டின் தசாப்தம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உத்தரகாண்ட் பெறும். அந்த ஒரு நோக்கத்துடன் எங்களுடைய அரசு பணியாற்றி வருகிறது. இதன்படி, ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
உலகில் எந்த நாடும் அடையாத பகுதியை நம்முடைய சந்திரயான்-3 சென்றடைந்தது. சந்திரயான் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என இந்தியா பெயரிட்டது. விண்வெளி மட்டுமின்றி, விளையாட்டிலும் இந்தியாவின் வலிமையை உலகம் இன்று பார்த்து வருகிறது.
முதன்முறையாக இந்திய வீரர்கள் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளனர் என பேசியுள்ளார்.