முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை


முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு: திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
x

உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற எச்சரிக்கை மற்றும் மராட்டிய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அவரது மனைவி நீதா அம்பானிக்கு வை பிரிவு பாதுகாப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த திரிபுரா ஐகோர்ட் என்ன மாதிரியான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சில தினங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவில், இந்த விவகாரத்தில் திரிபுரா கோர்ட்டுக்கு எந்த விதமான அதிகார வரம்பும் இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக பொதுநல மனுதாக்கல் செய்யமுடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story